படைப்பு

மூலம்: கலீல் கிப்ரான்

Table of contents

No heading

No headings in the article.

கடவுள் தன்னிலிருந்து ஒரு உயிர் பிரித்தெடுத்தான், அதை அழகுற செய்தான். அவள் மேல் கருணையையும் இரக்கத்தையும் வரங்களாய் பொழிந்தான். அவளிடம் ஒரு இன்பக் கோப்பையை அளித்தவாறே சொன்னான்

“சென்றதையும் வருவதையும் மறந்தாலொழிய இதை அருந்தாதே, இன்பம் என்பது அக்கணம் தவிர பிறிதில்லை என்பதால்”

அவளிடம் ஒரு துயரக்கோப்பையையும் அளித்த பின் சொன்னான்

”இதை அருந்து, உடனுடன் விரைந்தழியும் இன்பக் கணங்களையும், எப்போதுமாய் நிறைக்கும் துயரத்தையும் புரிந்து கொள்வாய்”

அறிந்து மகிழ்ந்து முதல் நிம்மதி பெருமூச்சு விடுந்தருணமே அவளை எப்போதுமாய் விட்டு பிரியும் காதலையும், முதன் முறையாய் செல்லப் பாராட்டை உணருந்தருணமே மறைந்தொழியும் இனிமையையும் அவளுக்கு அருளினான்.

நேர்மையான பாதையில் வழி நடத்தும் பேரறிவை சொர்க்கத்திலிருந்து அளித்தான்.

காணாததையும் காணும் திறன்மை கொண்ட ஒரு கண்ணை அவளின் இதயத்தில் ஆழப்பதித்தான்.

அனைத்தையும் நேசிக்கும் நற்குணத்தை அளித்தான்.

வானவில்லின் நரம்புகளிலிருந்து சொர்க்கத்தின் தேவதைகளால் நெய்யப்பட்ட நம்பிக்கையாலான ஆடையை அவளுக்கு அணிவித்தான்.

வாழ்க்கையின், ஒளியின் விடியல் போன்ற குழப்பத்தின் நிழலை அவள் மேல் போர்த்தினான்.

அதன் பின் கோபத்தின் உலையிலிருந்து பசித்தெரிக்கும் தீயை எடுத்தான்.

அறியாமை எனும் பாலையின் வறண்ட சூடான காற்றை எடுத்தான்.

சுய நலத்தின் கரையிலிருந்து கூர்மையான வெட்டும் மணல் எடுத்தான்.

காலத்தின் பாதத்திலிருந்து கரடான நிலம் எடுத்தான்.

அனைத்தையும் சேர்த்து அவனை உருவாக்கினான்.

ஆவேசமளித்து அவனை பித்தாக்குகின்ற ஆனால் ஆசையின் திருப்திக்கு முன்பே அணைந்து விடுகின்ற ஒரு கண்மூடித்தனமான சக்தியை அவனுக்கு அளித்தான். இறப்பின் ஆவியாய் உயிரை அவனுள் வைத்தான்.

அதன் பின் கடவுள் சிரித்தான். கடவுள் அழுதான்.

அவன் மேல் அதீத அன்பையும் அலாதியான இரக்கத்தையும் கடவுள் உணர்ந்து அவனுக்கு வழிகாட்டி அரவணைத்தான்.